தமிழ்நாடு

சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய 1-ந் தேதி முதல் 5 நாட்கள் அனுமதி

Published On 2024-07-24 05:05 GMT   |   Update On 2024-07-24 05:05 GMT
  • பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது.
  • பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

வத்திராயிருப்பு:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. சித்தர்களின் பூமி சிவகிரி என அழைக்கப்படும் சதுரகிரிக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

சதுரகிரி கோவிலில் வருடந்தோறும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 4-ந்தேதி ஆடி அமாவாசை ஆகும். இதனை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

வழக்கமாக 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக இந்த முறை 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைமேல் உள்ள கோவில் மற்றும் அடிவார பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் தாணிப்பாறைக்கு மதுரை, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதற்காக தாணிப்பாறையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மலைஏறும் பக்தர்கள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்ல கூடாது. 10 வயதிற்கு மேற்பட்டவர்கள், 60 வயதிற்குட்பட்டவர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது. ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்ப்பதால் அதற்கேற்ப போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News