காவல் தெய்வம் சிலை கண் திறந்ததால் பரபரப்பு
- சங்கிலி கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது.
- கடந்த 2 மாதங்களுக்கு இதே பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததால் பரபப்பு ஏற்பட்டது.
ஈரோடு மூலப்பட்டறை அருகே உள்ள காந்திபுரம் மில் வீதி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியின் எல்லையில் சங்கிலி கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் புணரமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த கோவிலில் உள்ள சங்கிலி கருப்பராயன் காவல் தெய்வமாக இருந்து வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு சென்றனர். இரவு திடீரென காவல் தெய்வம் சிலை வழக்கம் போல் இல்லாமல் கண் திறந்து காணப்பட்டது. இதை கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.
இது பற்றிய தகவல் அந்த பகுதி முழுவதும் பரவலாக பரவியது. இதை பற்றி தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். மேலும் வேலைக்கு சென்று திரும்பி மக்களும் ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். இதையடுத்து மக்கள் காவில் தெய்வமே என மனமுருகி வழிபட்டனர்.
தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர். பெண்கள், குழந்தைகள் என பலர் வந்த வண்ணம் இருந்தனர். மேலும் இதை செல்போன்களில் படம் பிடித்து மற்றவர்களுக்கு அனுப்பினர்.
நேற்று பெரியமாரியம்மன கோவிலில் கம்பம் நடப்பட்டது. அந்த நேரத்தில் சாமி கண் திறந்ததால் பக்தர்கள் பலர் பக்தி பரவசமாக பேசி கொண்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இதே போல் கடந்த 2 மாதங்களுக்கு இதே பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததால் பரபப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாமிகள் கண் திறந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள். இதனால் பொதுமக்கள் உடல் சிலிர்த்து காவல் தெய்வமே, தாயே அம்மா என்றும் கருப்பராயன் காவல் தெய்வமே என மெய் சிலிர்த்து கொண்டனர். அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.