விடுமுறை தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்
- வழக்கத்தை விட கோவில், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ராமேசுவரம்:
தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்க தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். வழக்கத்தை விட கோவில், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
முன்னோர்களுக்கு திதி கொடுத்த பக்தர்கள் கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி-பர்வத வர்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். இதற்காக பக்தர்கள் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதே போல் பேய்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவு மண்டபம், தனுஷ்கோடி கடற்கரை, கோதண்டராமர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.