தமிழ்நாடு

5 அடி உயரத்திற்கு எழுந்த அலையால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

Published On 2024-04-01 04:18 GMT   |   Update On 2024-04-01 04:19 GMT
  • மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களும் பலத்த சேதம் அடைந்தன.
  • சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ராமேசுவரம்:

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை. தீவுப்பகுதியான ராமேசுவரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனைக்கு சென்று இயற்கை அழகையும், வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் கண்டுகளிப்பது வழக்கம். இதனால் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாலையில் திடீரென மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பயங்கர சூறைக் காற்று வீசத்தொடங்கியது. இதனால் கடல் சீற்றம் ஏற்பட்டு தனுஷ்கோடி மீனவர் குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. மேலும் சீறி வந்த அலையால் தனுஷ் கோடி மற்றும் அரிச்சனை முனை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட தொடங்கியது. சுமார் 5 அடி உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகளால் எங்கு பார்த்தாலும் கடலாகவே காட்சி அளித்தது.

பல இடங்களில் மணல் பரப்பே தெரியாத அளவுக்கு அந்த பகுதிகளை கடல் நீர் சூழ்ந்திருந்தது. குறிப்பாக தனுஷ்கோடி பகுதியில் தங்கி தொழில் செய்து வரும் மீன் விற்பனையாளர்கள், குளிர்பான கடைகள் வைத்திருப்பவர்களின் உடமைகளை அனைத்தும் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும் மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களும் பலத்த சேதம் அடைந்தன.


இதனைதொடர்ந்து, அங்கு வழக்கமாக கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற எச்சரித்தனர். இதனால் பீதியடைந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உடனே அவர்கள் வந்த வாகனத்துடன் வெளியேறினர்.

நேற்று இரவு சுமார் 9 மணியளவில் மீண்டும் பயங்கர சூறாவளியுடன் காற்று வீசியதால் அப்போதும் கடல் நீர் நிலப்பரப்புகளை மூடியது. மணல் திட்டுகள் அனைத்தும் காணாமல் போனது. மேலும் அங்கு போடப்பட்டிருந்த தார்ச்சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு கற்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. தற்காப்புக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அனைத்தும் காற்றில் வேகத்தில் பறந்தன. அந்த பகுதியையும் கடல் நீர் குளம்போல் மாற்றியது.

மேலும் இன்றும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தனுஷ்கோடிக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல வருவாய்த்துறையினர் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடராஜபுரம் பகுதியில் காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் பகுதிகளுக்கு செல்ல ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News