தி.மு.க. முப்பெரும் விழாவுக்கான பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரம்
- பிரமாண்ட மேடையில் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஒரு பகுதியிலும், 40 எம்.பிக்கள் ஒரு பகுதியிலும் அமரும் வகையில் ஏற்பாடுகள் நடக்கிறது.
- விழா நடைபெறும் கொடிசியா மைதானத்தின் முகப்பில் இருந்து விழா நடைபெறுகிற இடத்தை சுற்றிலும் தி.மு.க. கொடிகள் கட்டும் பணியும் நடக்கிறது.
கோவை:
கோவை கொடிசியாவில் நாளை மறுநாள் (15-ந்தேதி) தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சிறப்பான வெற்றிக்கு கட்சியை வழி நடத்தி சென்ற முதலமைச்சருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடக்கிறது.
முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்.பிக்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.
விழாவுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கிறது. இதனையொட்டி முப்பெரும் விழா நடைபெறும் கொடிசியா மைதானத்தில், முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இரவு, பகலாக ஊழியர்கள் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மைதானத்தில் இதுவரை இல்லாத அளவாக விழா மேடையானது 40 அடி அகலத்தில், 150 அடி நீளத்தில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.
மேடையின் முகப்பில் உதயசூரியன் சின்னம், தி.மு.க. கொடி, அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவம் பொறித்த படங்களும் இடம்பெற உள்ளதாக தெரிகிறது.
இதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த பிரமாண்ட மேடையில் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஒரு பகுதியிலும், 40 எம்.பிக்கள் ஒரு பகுதியிலும் அமரும் வகையில் ஏற்பாடுகள் நடக்கிறது.
மைதானம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, இரு பகுதியாக பிரிக்கப்பட்டு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
நடுவில் முக்கிய பிரமுகர்கள் நடந்து செல்லும் வகையில் தனிபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், தி.மு.க.வில் மாநில அளவில் கட்சி பொறுப்பில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் முன்பகுதியில் அமரும் வகையில் தனித்தனி இருக்கைகளும் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
இதுதவிர விழா நடைபெறும் இடத்தில் தொண்டர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவதால் மாவட்ட வாரியாக பிரித்து, அவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவற்கு வசதியாக 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
இதுதவிர விழா நடைபெறும் கொடிசியா மைதானத்தின் முகப்பில் இருந்து விழா நடைபெறுகிற இடத்தை சுற்றிலும் தி.மு.க. கொடிகள் கட்டும் பணியும் நடக்கிறது.
விழாவை தொண்டர்கள் கண்டு ரசிப்பதற்கு வசதியாக ஆங்காங்கே மிக பிரமாண்ட எல்.இ.டி திரைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. பணிகள் நடந்து வரும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய நிலையில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதை முன்னிட்டு, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது. விழா நடைபெறும் இடம் மற்றும் மாநகர எல்லைகள் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.