தமிழ்நாடு

ம.பி. தேர்தலில் வெற்றி பெற பாஜக ரூ.12 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது: துரை வைகோ

Published On 2023-12-03 07:00 GMT   |   Update On 2023-12-03 08:12 GMT
  • அமலாக்கத்துறையின் தற்போதைய நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கிறது.
  • ரூ.400 ஆக இருந்த சிலிண்டர் விலை 10 வருடத்தில் ரூ.1100 வரை உயர்ந்துள்ளது.

திண்டுக்கல்:

ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

லஞ்சம், ஊழலை ஒழிக்கவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவை உருவாக்கப்பட்டது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் அமலாக்கத்துறையை பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தற்போது திண்டுக்கல்லில் டாக்டரை மிரட்டி பணம் பறித்த அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அமலாக்கத்துறையின் தற்போதைய நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசியல்வாதிகளுக்கு முதிர்ச்சியில்லை என கூறுகிறார். மத சாயம் பூசி தவறான தகவல்களை தெரிவிப்பதுதான் முதிர்ச்சியா என்பதை அவர் விளக்க வேண்டும்.

மேலும் தற்போது கவர்னர்கள் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பர்ஷித் ஆகியவற்றின் கொள்கை பரப்பு செயலாளர்கள் போல் செயல்படுகின்றனர். மத்திய பிரதேச தேர்தலில் வெற்றிபெற ரூ.12 ஆயிரம் கோடி வரை பா.ஜனதாவினர் செலவழித்துள்ளனர். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதற்கு அடிப்படை காரணமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வாகும். தேர்தல் நேரங்களில் மட்டும் டீசல், பெட்ரோல், சிலிண்டர்களின் விலையை குறைக்கின்றனர். ரூ.400 ஆக இருந்த சிலிண்டர் விலை 10 வருடத்தில் ரூ.1100 வரை உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News