டெண்டர் முறைகேடு வழக்கு- எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு
- ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.
சென்னை:
டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பை செல்லாது என அறிவித்தது.
இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தக்கல் செய்யப்பட்டது.