தமிழ்நாடு

எண்ணெய் கசிவு - கூடுதல் நிவாரணம் வழங்குக!

Published On 2023-12-25 06:16 GMT   |   Update On 2023-12-25 06:16 GMT
  • மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
  • மீனவ கிராமங்களுக்கும் அரசின் நிவாரணம் முழுமையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மிச்சாங் புயலின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக வெள்ளநீர் கழிவுகளுடன் எண்ணெய் கழிவு கலந்து எண்ணூர் முகத்துவாரம் பகுதி வழியாக கடலில் கலந்தது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மீனவர்கள் தொழில் செய்யக்கூடிய பகுதிகள் அனைத்தும் எண்ணெய் படலமாக மாறி அப்பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் அனைத்தும் எண்ணெய் படலத்தால் சேதமடைந்து, மீனவர்கள் மீன்பிடிக்கும் தொழில் செய்ய முடியாமல், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் மீனவர்கள் கடலிலும், முகத்துவாரத்திலும் மின்பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், இந்த விடியா திமுக அரசு எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட சுமார் 6,700 பேருக்கு தலா 7,500/- ரூபாய் நிவாரணமாகவும், மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,300 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா 12,500/- ரூபாயும், படகுகளை சரிசெய்ய படகு ஒன்றுக்கு 10,000/- ரூபாயும் வழங்கப்படும் என்று விடியா திமுக அரசு அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட இந்நிவாரணம் மிகவும் குறைவாக உள்ளது.


எனவே, எண்ணெய் கசிவினால் சுமார் 20 நாட்கள் மீன்பிடி தொழிலுக்குப் போகாமல், மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில், தற்போது இந்த அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. எனவே, பாதிக்கப்பட்ட மீனவர்கள் விடியா திமுக அரசை எதிர்த்து, நிவாரணத்தை உயர்த்தி வழங்கக் கோரி வீதிக்கு வந்து போராடிய நிலையில், அவர்களைக் கைது செய்துள்ள விடியா திமுக அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

2017-ஆம் ஆண்டு அம்மாவின் ஆட்சியின் போது, காமராஜர் துறைமுகத்தில் இருந்த இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்ட நிகழ்வில் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவ கிராமங்களுக்கும், மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நிவாரணமும், மீன்பிடி படகுகள் மற்றும் சாதனங்களுக்கான நிவாரணமும் வழங்கப்பட்டது.

மேலும், பெரிய படகு ஒன்றுக்கு 35,000/- ரூபாயும், கண்ணாடி இழை படகிற்கு (FRP) 15,000/- ரூபாயும், கட்டுமரத்திற்கு 10,000/- ரூபாயும் வழங்கினோம். மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு முதற்கட்டமாக குடும்பம் ஒன்றிற்கு 5,000/- ரூபாயும், அடுத்தகட்டமாக மீன்பிடி கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த ஒவ்வொரு மீனவருக்கும் தலா 12,000/- ரூபாயும் வழங்கப்பட்டது.

அதுதவிர, மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினராக இருந்த ஒவ்வொரு மீனவ மகளிருக்கும் 10,000/- ரூபாயும், மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணமாக தலா 10,000/- ரூபாயும் வழங்கினோம்.

எனவே, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளை உதாசீனப்படுத்தாமல், அவர்கள் மீண்டும் மீன்பிடித் தொழில் செய்வதற்கு ஏதுவாக, தற்போதுள்ள விலைவாசியை கருத்திற்கொண்டு ஒவ்வொரு படகிற்கும் நிவாரணமாக 50,000/- ரூபாயும், கண்ணாடி இழை படகிற்கு (FRP) 30,000/- ரூபாயும், கட்டுமரத்திற்கு 20,000/- ரூபாயும், மீன்பிடி வலைக்கு 25,000/- ரூபாயும் வழங்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், 20 நாட்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல முடியாததால், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசெய்யும் வகையில் தற்போது அறிவித்துள்ள நிவாரணத் தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்குமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

எண்ணெய் கசிவு, முகத்துவாரத்தில் இருந்து கடலில் கலந்துள்ள நிலையில், கடற்கரையை ஒட்டியுள்ள, பாதிக்கப்பட்ட அனைத்து மீனவ கிராமங்களையும் கண்டறிந்து, அந்த மீனவ கிராமங்களுக்கும் அரசின் நிவாரணம் முழுமையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News