தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

Published On 2022-12-26 04:59 GMT   |   Update On 2022-12-26 04:59 GMT
  • பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதிக்க உள்ளார்கள்.
  • கூட்டத்தில் எடுக்கப்போகும் முடிவுகள் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக எதிர் பார்க்கப்படுகிறது.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிறுவையில் உள்ளது.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும்தான் தான் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டு புது நிர்வாகிகளை நியமித்து வருகிறார். 88 மாவட்ட செயலாளர்களையும் புதிதாக நியமித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் கூட்டி ஆலோசனை நடத்தினார். அடுத்ததாக பொதுக்குழு கூட்டப்படும் என்று கூறி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடிவு செய்து இருந்த நிலையில் கோர்ட்டு விசாரணை காரணமாக தள்ளி வைத்தனர்.

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்தையும் இணைத்து கொள்ள வேண்டும் என்று கூட்டணி கட்சியான பா.ஜனதாவும் நெருக்கடி கொடுத்து வருகிறது. அதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை.

புத்தாண்டு தொடக்கத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாம் என்று தெரிகிறது. எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு தலைமை கழகத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கோர்ட்டு தீர்ப்பு வருவதை பொறுத்து அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று ஆலோசிக்கிறார்கள்.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்க உள்ளார்கள். இந்த கூட்டத்தில் எடுக்கப்போகும் முடிவுகள் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News