தமிழ்நாடு

ஈளாடா தடுப்பணையின் நீர்மட்டம் கிடுகிடு சரிவு- குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

Published On 2024-04-27 04:01 GMT   |   Update On 2024-04-27 04:01 GMT
  • விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
  • கோத்தகிரியில் உள்ள ஒரு சில பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கோத்தகிரி:

கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு அருகே உள்ள ஈளாடா கிராமத்தில் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், 9 முதல் 12 அடி ஆழமும் கொண்ட ஈளாடா தடுப்பணை உள்ளது.

மலைப்பகுதியில் உள்ள இயற்கை ஊற்றுக்களில் வரும் தண்ணீர் இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் கோத்தகிரி நேரு பூங்கா அருகில் உள்ள நீர் உந்து நிலையத்திலுள்ள தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு, நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பணையை நம்பி, அதன் அருகே உள்ள விவசாய நிலங்களும் பயன்பெற்று வருகின்றனர். விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக கொடநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இயற்கை ஊற்றுகள் காய்ந்து வறண்டு காணப்படுகிறது.

இதனால் ஈளாடா அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணையில் தண்ணீர் குறைந்துள்ளது. தொடர்ந்து வெயில் அடித்து வருவதாலும், அணையில் தண்ணீர் குறைவதாலும் ஈளாடா, கோத்தகிரி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

இப்போதே கோத்தகிரியில் உள்ள ஒரு சில பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கோத்தகிரி மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மாற்று திட்டமாகக் கொண்டு வரப்பட்ட அளக்கரை குடிநீர் திட்டத்தில் நீர் உந்து அறைகளில் ஏற்பட்டு வரும் மின் அழுத்தக் குறைபாடு காரணமாக மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதாலும், நீர் உந்து நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்களுக்கான மின்கட்டணம் மிக அதிகமாக இருப்பதாலும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அளக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News