கரூர் அருகே நள்ளிரவில் வயதான தம்பதியை கொன்று நகைகள் கொள்ளை
- கொள்ளையர்கள் அந்த மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் கம்மல்களை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
- தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர்:
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார். தொழிலதிபரான இவருக்கு சொந்தமான மாந்தோப்பு வாங்கல் ஓடையூரில் உள்ளது.
இந்த தோப்பினை திருச்சி மாவட்டம் காட்டுப் புத்தூர் பெருமாள் காட்டுப் புத்தூரைச் சேர்ந்த தங்கவேல் (வயது 64)என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனது மனைவி மயிலியுடன் தோட்டத்திலேயே தங்கி இருந்தார்.
இந்த வயதான தம்பதி தங்குவதற்கு தோட்டத்தில் ஒரு சிறிய குடிசை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல் நேற்று இரவு சமையல் செய்து சாப்பிட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் படுத்து உறங்கினர்.
இதற்கிடையே நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் குடிசை வீட்டின் கதவை தட்டினர். உடனே தங்கவேல் திடுக்கிட்டு எழுந்து கதவை திறந்தார். அடுத்த நொடி கொள்ளையர்கள் தாங்கள் எடுத்து வந்த மிளகாய் பொடியை கணவன்-மனைவி இருவர் மீதும் தூவி சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த தங்கவேல், அவரது மனைவி மயிலி ஆகிய இருவரும் மயங்கி விழுந்து இறந்தனர்.
பின்னர் கொள்ளையர்கள் அந்த மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் கம்மல்களை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த மாந்தோப்பு தோட்டத்தில் வயதான தம்பதியினரின் நடமாட்டம் இல்லாததால் கிராம மக்கள் குடிசை வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக வாங்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். கொள்ளையர்கள் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.
தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.