தமிழ்நாடு

வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் பாதிப்பு

Published On 2024-01-23 06:17 GMT   |   Update On 2024-01-23 06:17 GMT
  • ஜவுளி சந்தை ஈரோடு அசோகபுரம், சென்ட்ரல் தியேட்டர் பகுதியிலும் நடைபெறுகிறது.
  • பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜவுளி வியாபாரம் கடந்த சில நாட்களாக மந்த நிலையில் நடந்து வருகிறது.

ஈரோடு:

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடை, வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது.

இந்த ஜவுளி சந்தை ஈரோடு அசோகபுரம், சென்ட்ரல் தியேட்டர் பகுதியிலும் நடைபெறுகிறது. ஜவுளி சந்தையில் துணிகளை கொள்முதல் செய்வதற்காக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள் வந்து துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

இதேப்போல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் சிறுகுறு வியாபாரிகளும் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் சூடு பிடித்தது. பொங்கல் பண்டிகை முடிந்து பிறகு ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்த நிலையில் நடந்து வந்தது.

இந்நிலையில் இன்று ஜவுளி வாரச்சந்தை கூடியது. ஆனால் வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவே இல்லை. கேரளாவில் இருந்து மற்றும் ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று மொத்த வியாபாரம் 15 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. இதேபோல் சில்லரை வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது.

பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜவுளி வியாபாரம் கடந்த சில நாட்களாக மந்த நிலையில் நடந்து வருகிறது. இன்று கூடிய ஜவுளி வார சந்தையிலும் வெளி மாநில வியாபாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இனி வரக்கூடிய நாட்களில் தைப்பூசத்தையொட்டி வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News