தமிழ்நாடு

தொகுதி செயல்பாடுகளை பற்றி விமர்சனம் செய்த அண்ணாமலை நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? ஈஸ்வரன் சவால்

Published On 2023-10-30 06:08 GMT   |   Update On 2023-10-30 06:08 GMT
  • 50 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த அரசு சார்பில் கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டு செயல்படுகிறது.
  • பல்வேறு மக்களுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்திலே பேசி அவற்றை நிறைவேற்றுகின்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றேன்.

திருச்செங்கோடு:

தமிழகம் முழுவதும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின்போது பொதுமக்களை சந்தித்து பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுகிறார். குறிப்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் மாலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சட்டமன்ற உரைகளை பற்றியும், தொகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதிலளித்து ஈஸ்வரன் எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 30 மாதங்களில் பலமுறை நான் சட்டமன்றத்திலே பேசியிருக்கிறேன். திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் அமைப்பதை பற்றி சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன். ரோப் கார் என்பது சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டு திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் அமைக்க முடியுமா என்பதை ஒரு குழு ஆய்வு செய்து சாத்தியக்கூறு இல்லை என்பதை அறிவித்த பின் இந்து சமய அறநிலையத்துறை மாற்று சாலையை அமைப்பதற்கு நெடுஞ்சாலை துறையிடம் கருத்துரு அனுப்பி இருக்கிறது. இது நெடுஞ்சாலைத்துறை ஆய்வில் தற்போது இருக்கிறது.

50 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த அரசு சார்பில் கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டு செயல்படுகிறது. திருச்செங்கோடு புறவழிச்சாலை 50 சதவீதம் முடிக்கப்பட்டு மீதி பகுதிகளுக்கு ஒப்பந்ததாரர் பணிகளை தொடங்க இருக்கிறார். 9 கோடி ரூபாய் செலவில் வாரச்சந்தை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 5 கோடி ரூபாய் செலவில் தினசரி சந்தை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 17 வழித்தடங்களில் புதிதாக பஸ்கள் விடப்பட்டு இருக்கின்றன.

இன்னும் பல்வேறு பணிகள் தொகுதி முழுவதும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இன்னும் பல்வேறு மக்களுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்திலே பேசி அவற்றை நிறைவேற்றுகின்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றேன்.

எதுவுமே தெரியாமல் திருச்செங்கோட்டிலே வந்து பொய்யான கருத்துக்களை பேசி இருப்பது நியாயமா? என்னுடைய செயல்பாடுகளை கேள்வி கேட்க ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை இருக்கிறது. அதே சமயம் பதில் சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது.

என்னுடைய சட்டமன்ற உரைகளைப் பற்றியும் சட்டமன்ற உறுப்பினராக என் செயல்பாடுகள் பற்றியும் அண்ணாமலை என்னோடு விவாதிக்க தயாரா? தேதியையும், நேரமும், இடமும் குறிப்பிடுங்கள் விவாதத்திற்கு நான் தயார்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News