மு.க. ஸ்டாலினிடம் டியூஷன் போங்க.. பிரதமரை கிழித்தெடுத்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
- கடவுளின் அவதாரம் என்று சொல்லும் மோடி இயற்கை பேரிடர் வரும் முன்பு நடவடிக்கை எடுக்கவில்லை.
- ராமர் கோவில் மீது செலுத்திய கவனத்தை மோடி மலை பிரதேசங்களில் செலுத்த வேண்டும்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று ஈ.வி.கே.ஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சி கூட்டணி ஒத்துழைப்போடு அமைத்த சூழலில் கூட பாராளுமன்ற கூட்டத்தில் வரம்பு மீறி பேசுகிறார்கள். மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ராகுல் காந்தி பார்த்து சாதி பற்றி பேசுவது அநாகரிகமான செயல். மட்டமான பேச்சை மத்திய அமைச்சர்களுக்கு சொல்லிக் கொடுத்தது பிரதமர் நரேந்திர மோடி தான்.
மத்திய அமைச்சர்கள் அவதூறாக பேச வேண்டும் என தூண்டி விடுவதால் ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும். ஆனால் ராகுல் காந்தி பெரும் தன்மையாக தனது பேச்சில் கண்ணியத்தை கடைப்பிடித்து உள்ளார். மோடியின் சர்வாதிகார தன்மை நீண்ட நாளுக்கு நீடிக்காது.
நீடித்தால் வன்முறையுடன் அல்லது வன்முறை இல்லாமல் மோடி வீழ்த்தப்படுவார். ஆட்சியில் இருந்து நாட்டு மக்கள் அவரை துரத்தி விடுவார்கள். அது காந்தி வழியா, நேதாஜி வழியா என்று தெரியவில்லை. புதிய சட்டத்தின் பெயர்கள் இந்தி சமஸ்கிருத மொழியில் மாற்றி இருக்கிறார்கள். இதற்கு நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் நீதிபதிகள் சட்டத்தை பெயர் மாற்றத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த சட்டத்தை மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும். கேரள மாநிலம் வயநாட்டில் இயற்கை பேரிடர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் ராகுல் காந்தி தான் காரணம் என்று மத்திய அரசு சொல்கிறது.
கடவுளின் அவதாரம் என்று சொல்லும் மோடி இயற்கை பேரிடர் வரும் முன்பு நடவடிக்கை எடுக்கவில்லை. ராமர் கோவில் மீது செலுத்திய கவனத்தை மோடி மலை பிரதேசங்களில் செலுத்த வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மக்கள் பயனடையும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவரிடம் பிரதமர் மோடி திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து டியூஷன் எடுக்க வேண்டும்.
கார்த்தி சிதம்பரம் கட்சி வளர்ச்சி குறித்து பேசியதாக சொன்னார். மோடி நல்ல தலைவர் என்று சொன்னது கட்சி வளர்ச்சியா? நான் கார்த்தி சிதம்பரம் திருந்துவாறு என்று நினைத்தேன். காங்கிரஸ் கூட்டத்தில் இதுபோன்ற தகவல்கள் வந்ததால் சிறிது நாள் கழித்து கருத்து சொன்னேன். கள் பருகுவதால் உடல்நலம் பாதிப்பு ஏற்படாது. கள்ளுக்கடை திறந்தால் கள்ளச்சாராயம் விற்பனை குறையும்.
கள் விற்பனை செய்ய அனுமதி அளித்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும். கவர்னர் இமயமலைக்கு சென்று தியானம் செய்வதை விட்டு தமிழகத்தில் ஏன் கவர்னராக மத்திய அரசு போட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மத்திய அரசு ஆந்திரா, பீகார் மாநிலத்திற்கு 10 ஆண்டுகளாக ஆட்சி எதுவும் செய்யாமல் தற்போது ஏன் நிதியை அதிகமாக ஒதுக்கீடு செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.