ஜவ்வரிசி ஆலை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் விவசாயிகள் உண்ணாவிரதம்
- காட்டுக்கோட்டை ஊராட்சியில் சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் கால்வாய்கள் உள்ளது.
- சேகோ ஆலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் காட்டுக்கோட்டை ஊராட்சியில் புதிதாக ஜவ்வரிசி ஆலை தொடங்க தனியாருக்கு அரசு அனுமதி அளித்து உள்ளது.
இதை கைவிட வலியுறுத்தியும், புதிதாக ஆலை தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காட்டுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் இன்று காலை சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பெரியசாமி கிருஷ்ணமூர்த்தி, பரமசிவம், ஆனந்த், உதயகுமார், முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வக்கீல் குருசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து விவசாயிகள் கூறும்போது, காட்டுக்கோட்டை ஊராட்சியில் சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் கால்வாய்கள் உள்ளது. இந்த பகுதியில் சேகோ ஆலை தொடங்குவதால் கால்வாயின் நீர்வழித் தடங்கள் அழியும் அபாயம் ஏற்படும்.
மேலும் சேகோ ஆலையில் இருந்து வெளியாரும் கழிவினால் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படும். எனவே இந்த சேகோ ஆலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
இதில் விவசாயி சங்க நிர்வாகிகள் இளங்கீரன், ராமமூர்த்தி தங்கவேல், வெற்றிமணி, பழனியப்பன் சந்திரமோகன், செல்வராஜ், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.