தமிழ்நாடு

மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்புள்ள சாலையோர கடைகளில் தீ விபத்து

Published On 2022-07-05 05:32 GMT   |   Update On 2022-07-05 05:32 GMT
  • மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.
  • தீ விபத்து நடந்த பகுதியில் அவசர சிகிச்சை பிரிவு வார்டு செயல்பட்டு வருகிறது.

மதுரை:

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். பரபரப்பாக செயல்படும் மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு டீக்கடைகள், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

நேற்று நள்ளிரவு சாலையோர கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அந்தப்பகுதியினர் உடனடியாக அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் கொழுந்துவிட்டு எரிந்த தீ அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு பகுதியில் உள்ள மரத்தில் பரவி எரிந்தது.

இதனிடையே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து நடந்த பகுதியில் அவசர சிகிச்சை பிரிவு வார்டு செயல்பட்டு வருகிறது. தீ விபத்தால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு செவிலியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தீ விபத்து தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனை நடைபாதையில் சாலையோர கடைகள் அதிகம் உள்ளன. இதனால் பொதுமக்கள், மெயின் ரோட்டில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

எனவே மதுரை மாநகராட்சி மற்றும் போலீசார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாலையோர நடைபாதை கடைகளை உடனடியாக அகற்ற முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News