தமிழ்நாடு (Tamil Nadu)

தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து- போலீசார் விசாரணை

Published On 2024-09-28 04:34 GMT   |   Update On 2024-09-28 04:34 GMT
  • தீ விபத்து காரணமாக வான் உயரத்தில் புகை மண்டலம் உருவாகியது.
  • தீவிபத்து குறித்து தகவலறிந்த ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே திம்ஜேப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட கூத்தனபள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த தனியார் தொழிற்சாலையில் உள்ள கெமிக்கல் யூனிட் பகுதியில் இன்று அதிகாலை திடீரென்று புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ பிடிக்க தொடங்கியது.

இந்த தீ மளமளவென பரவியதால், தொழிற் சாலையில் கெமிக்கல் யூனிட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால், அங்கிருந்த பொருட்கள் எரிந்து முழுவதும் நாசமானது.

தீ விபத்து காரணமாக வான் உயரத்தில் புகை மண்டலம் உருவாகியது. முதற்கட்டமாக தீயை அணைக்க தொழிற்சாலையில் உள்ள தீயணைப்பு வாகனத்தைக் கொண்டு தொழிலாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர்.

அப்போது தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததால், தொழிலாளர்களால் அந்த தீயை அணைக்க முடியவில்லை.

இதனை தொடர்ந்து ராயக்கோட்டை மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து, தீயணைக்கும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் 2 பணியாளர்களுக்கு மட்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர்களை உடனே சக ஊழியர்கள் மீட்டு தொழிற்சாலையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக தெரிகிறது.

இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்த ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் அதிகாலை ஷிப்ட் முறைப்படி 1500 பணியாளர்களுக்கு பதிலாக 2000 பணியாளர்கள் பணியாற்றியதால், தீவிபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்தில் அங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் உட்பட யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கெமிக்கல் யூனிட்டில் தீ விபத்து என்பதால், தீ விபத்தில் எவ்வளவு மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தீவிபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News