தமிழ்நாடு

3-வது நாளாக தொடரும் மீனவர்கள் வேலைநிறுத்தம்: ராமேசுவரத்தில் ரூ.3 கோடி மீன்வர்த்தகம் பாதிப்பு

Published On 2024-07-10 04:56 GMT   |   Update On 2024-07-10 04:56 GMT
  • ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 8-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
  • வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஆயிரக்கனக்கான மீனவர்கள் மாற்று தொழிலுக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், மீன்பிடி தடைகாலத்திற்கு முன்பு இறால் மீன், கணவாய், நண்டு, சங்காயம் உள்ளிட்ட மீன்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்தனர். ஆனால் தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்க சென்று திரும்பிய போது 50 சதவீதம் விலையை குறைத்து வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து கொள்முதல் செய்தனர்.

இதனால் படகு ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தலை தாண்டி மீன்பிடித்து வரும் மீன்களுக்கு உள்ளூர் மீன் ஏற்றுமதியாளர்கள் விலையை குறைத்து மீன்களை கொள்முதல் செய்வதால் படகுகளை தொடர்ந்து இயக்க முடியாத நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இறால் மீனுக்கு உரிய விலை வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 8-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மூன்றாவது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது.

இதன் காரணமாக துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேசுவரத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஆயிரக்கனக்கான மீனவர்கள் மாற்று தொழிலுக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ராமேசுவரத்தில் 150-க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதுகுறித்து மீனவ சங்க பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் கூறுகையில், ராமேசுவரத்தில் இயக்கப்பட்டு வரும் சிறிய படகுகள் குறைந்தளவே செலவு செய்து மீன்பிடிக்க செல்வதால் அதற்கு ஏற்றவாறு மீன்கள் கிடைத்தால் போதும். இதனால் அவர்கள் இன்று கடலுக்கு சென்று உள்ளனர்.

விசைப்படகு மீனவர்கள் பிடித்து வரும் இறால்மீன், நண்டு, கணவாய், சங்காயம் மீனுக்கு வியாபாரிகள் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News