கொடைக்கானலில் மலைப்பூண்டு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
- பருவம் தவறி பெய்த மழை காரணமாக மலைப்பூணடு விளைச்சல் பாதிக்கப்பட்டது.
- தேவை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ற விளைச்சல் விவசாயிகளால் எடுக்க முடியவில்லை.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, வில்பட்டி, பள்ளங்கி, பூண்டி, கிளாவரை போளூர், கூக்கால், புதுப்புத்தூர், பழம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய பயிராக மலைப்பூண்டு விவசாயம் நடைபெற்று வருகிறது.
புவிசார் குறியீடு பெற்ற இந்த மலைப்பூண்டு விவசாயத்தில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானலில் நிலவும் தட்பவெப்பநிலை, மண்ணின், தன்மை, மலையின் உயரம் போன்ற காரணிகளால் இந்த மலைப்பூண்டுக்கு கடந்த 2018ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
இருந்தபோதும் பல சமயங்களில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்து வந்தனர். தற்போது மலைப்பூண்டுக்கு கூடுதல் விலை கிடைத்து வருவது அவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
1 கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டு வந்த மலைப்பூண்டு தற்போது ரூ.600 முதல் ரூ.650 வரை விற்கப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் கூடுதல் பரப்பளவில் மலைப்பூண்டு விவசாயம் செய்யப்படவில்லை.
வடமாநிலங்களில் இருந்து வரும் வெள்ளைப்பூண்டு வரத்து அடியோடு நின்று விட்டது. இதனால் கொடைக்கானலில் இருந்து மட்டுமே வெள்ளைப்பூண்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு செல்கிறது.
பருவம் தவறி பெய்த மழை காரணமாக மலைப்பூணடு விளைச்சல் இங்கு பாதிக்கப்பட்டது. இதனால் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ற விளைச்சல் விவசாயிகளால் எடுக்க முடியவில்லை. இங்கிருந்து பெரியகுளம், வடுகபட்டி சந்தைக்கு மலைப்பூண்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த சந்தை தனியார் வசம் உள்ளதால் அவர்களே அதிக லாபம் அடைந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில்தான் மலைப்பூண்டை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு வியாபாரிகள், இடைத்தரகர்கள் தங்கள் லாபத்துக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயம் செய்து விற்று வருகின்றனர். இதனால் கஷ்டப்பட்டு விளைவிக்கும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை. அறுவடை செய்யக்கூடிய பூண்டு அனைத்தும் ஓரளவு பதப்படுத்தப்பட்டு 150 கி.மீ தூரத்தில் வாகனத்தில் எடுத்துச் சென்ற பிறகுதான் வடுகபட்டி சந்தையில் சந்தைப்படுத்தும் நிலை உள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு அதிகரித்து வருகிறது. எனவே கொடைக்கானலில் மலைப்பூண்டுக்கு சந்தை மற்றும் பதப்படுத்தும் கிடங்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.