மக்களுக்கான கடமையை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறி விட்டார்- ஜி.கே.வாசன்
- மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதில்லை.
- தமிழக முதலமைச்சர் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதிலும் அரசியல் இருக்கிறது.
கோவை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ் மாநில காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலேயே எதிர்கொள்வோம்.
2026-ம் ஆண்டில் வளமான தமிழகத்துக்கு வழி வகுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
மத்திய அரசு தமிழகத்திற்கு நிதியை ஒதுக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்வதிலும், தமிழக முதலமைச்சர் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதிலும் அரசியல் இருக்கிறது.
இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பங்கேற்று இருக்க வேண்டும். அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்காததன் மூலம் தமிழக மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை தவறி விட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல துறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்பி மக்கள் வாக்களித்தனர். ஆனால் முதலமைச்சர் மக்கள் தேவையை நிறைவேற்ற தவறி விட்டார்.
மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் முதல் மந்திரிகளுக்கு மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் அவர்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதில்லை. எந்தெந்த மாநிலத்திற்கு நிதி தேவையோ அந்தந்த மாநிலத்திற்கு தேவைக்கேற்ப நிதி ஒதுக்குகிறார்கள். தமிழகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரஸின் வேண்டுகோள். கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.