தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- 8ம் தேதியில் இருந்து 10ம் தேதி வரை வட மாவட்டங்களில் மீண்டும் மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை மறுநாள் (5-ந்தேதி) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது மேலும் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து 8ம் தேதி வட தமிழகம்- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வட தமிழகத்தை நோக்கி வரக்கூடும் என்பதால் அடுத்த வாரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
அதாவது 8ம் தேதியில் இருந்து 10ம் தேதி வரை வடமாவட்டங்களில் மீண்டும் மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.