கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிறையில் உள்ள தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்- திருமாவளவன் வலியுறுத்தல்
- பாராளுமன்றம் என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமானதாகும்.
- புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்ட தினத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கருப்பு தினமாக அறிவிக்கிறது.
சிதம்பரம்:
சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகிலேயே 2-வது பெரிய ரெயில்வே ஸ்தாபனமான இந்திய ரெயில்வே துறையில் ஓடிசா ரெயில் விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சி.ஐ.ஜி. எனப்படும் தணிக்கை துறையின் அறிக்கையை துரிதமாக செயல்படுத்தியிருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். எனவே இந்த விபத்திற்கு பிரதமர் மோடி முழுப்பொறுப்பேற்க வேண்டும். மத்திய ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும், இது தொடர்பாக விசாரணை நடத்திட தனி ஆணையம் அமைக்க வேண்டும்.
கடந்த காலத்தில் ரெயில்வே அமைச்சராக இருந்த மம்தாவால் செயல்படுத்தப்பட்ட கலாச்சி என்ற பெயரிலான விபத்து தடுப்பு திட்டம் செயல்படுத்தியிருந்தாலே இந்த விபத்து நிகழாமல் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ரெயில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.ஆயிரம் கோடி ஓதுக்கீடு செய்தும் இந்த விபதது நடந்துள்ளது உலக அரங்கில் இந்தியாவிற்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீராம், ஹரே ராம் என்று கோஷம் இடுபவர்களுக்கும், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி மந்திரி சபையில் இடம் தரப்படுகிறது, பாராளுமன்றம் என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமானதாகும். ஆனால், இங்கு ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அழைத்து திறப்பு விழா நடத்தியது தவறாகும். எனவே, புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்ட தினத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கருப்பு தினமாக அறிவிக்கிறது.
விழுப்புரம் மெல்பாதி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றவர்களை தாக்கிய சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருந்தபோதும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. கடந்த 1947-ம் ஆண்டு ஆலய நுழைவு தனிச்சட்டம் இயற்றப்பட்டது. இருந்தபோதும் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான இந்து சமய அறநிலைத்துறை தொடர்பான கோவில்களில் சாதிய மறுப்பு நிகழ்வு நடைபெறுவது வெட்கக்கேடானது.
பா.ம.க. போன்று சாதி வெறுப்பு அரசியலில் ஈடுபடும் அரசியல் வாதிகளாலேயே இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்கதையாக உள்ளது. இதற்கு எதிராக எனது தலைமையில் வருகிற 9-ந்தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதேபோல மதுரை திருமோகூர் கோவிலில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளும், கார், கொடி மரம், பெயர்ப்பலகைகள் கலவரத்தில் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டதே தவிர யாரும் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து எனது தலைமையில் 12-ந்தேதி மதுரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சிதம்பரத்தில் நடந்த குழந்தை திருமணம் கண்டிக்கத்தக்கதாகும். குழந்தைகள் திருமண வயதை எட்டிய பின்னரே அவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைபாடாகும்.
தமிழகம் முழுவதும் சிறையில் 10 ஆண்டு நிறைவு செய்த தண்டனை கைதிகளை கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.