தமிழ்நாடு

பணிகள் இன்னும் முடியாததால் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறப்பு மேலும் தாமதமாகும்

Published On 2023-08-04 09:28 GMT   |   Update On 2023-08-04 09:28 GMT
  • மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் கால்வாய் பணிகளும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.
  • கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் பின்புறத்தில் இருந்து பஸ்கள் அய்யன்சேரி வழியாகச் சென்று ஊரப்பாக்கம் நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கான சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

வண்டலூர்:

சென்னையில் தற்போது கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு அரசு விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை நகருக்குள் இயங்கும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. இதே போல் மாதவரத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசைலை கருத்தில் கொண்டு வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்களை புறநகர் பகுதியில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு நவீன வசதிகளுடன் பிரம்மாண்ட பஸ்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையத்திற்கான கட்டுமான பணிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

கொரோனோ பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஸ் நிலைய கட்டுமான பணி மெதுவாக நடந்து வந்தது. இதனால் குறிப்பிட்ட காலத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணியை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கட்டுமான பணியை அவ்வப்போது ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

பஸ் நிலையத்தில் 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில் மீதி உள்ள பணிகளை முடிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

பஸ் நிலையத்தில் பயணிகள் தங்குமிடம், சாதாரண அறை, குளிர்சாதன அறை மற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்குவதற்கான இடம் கட்டுமான பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

இதேபோல் கழிவறைகள் மற்றும் பஸ் நிலையத்தை சுற்றி அமைய வேண்டிய கடைகளின் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. பயணிகளின் வாகனத்தை நிறுத்துவதற்கான பார்க்கிங் ஏரியா பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. உணவகங்கள் பணியும் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது.

பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருக்கும் வளைவு, அதனைச் சுற்றி பொறிக்க வேண்டிய கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் போன்ற எழுத்துக்களும் இன்னும் பொறிக்கப்படவில்லை.

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் பின்புறத்தில் இருந்து பஸ்கள் அய்யன்சேரி வழியாகச் சென்று ஊரப்பாக்கம் நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கான சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த சாலை அமைத்தால் வாகனங்கள் தொடர்ச்சியாக போகும் நிலையில் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் வாகன நெரிசல் அதிகமாக ஏற்படும் என்பதால் மாற்று சாலை திட்டத்தை கருத்தில் கொண்டு அந்த சாலை பணியும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் கால்வாய் பணிகளும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தத்திற்கான இடத்தை முதலில் படப்பை அருகில் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அங்கிருந்து ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரும் போதும், பயணிகளை ஏற்றி சென்று மீண்டும் செல்லும் போதும் இரண்டு முறை டோல்கேட்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த இடம் தேர்வு கைவிடப்பட்டது. எனவே ஆம்னி பஸ்களுக்கான இடத்தையும் தேர்வு செய்து ஆய்வு செய்யும் பணி இன்னும் முழுமையாக முடியாமல் உள்ளது.

பல்வேறு பணிகள் முடிவடையாமல் உள்ளதால் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை திறக்க மேலும் தாமதாகும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பஸ்நிலையத்தில் கட்டுமான பணிகள் முடிந்து ஒரு பகுதியை மட்டும் முதலில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் கட்டமாக திருநெல்வேலிக்கு விரைவு பஸ்களும் அடுத்த கட்டமாக மதுரைக்கும் பஸ்களை இயக்க முடிவு செய்து உள்ளனர். பின்னர் படிப்படியாக பஸ் நிலையம் முழுவதையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது கூறியதாவது:-

கிளாம்பாக்கம் பஸ் நிலைய கட்டுமான பணி வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் இன்னும் முடியாததால் திறப்பு தள்ளிப்போகும்.

மொத்தம், 10 பணிகள் நிலுவையில் உள்ளது. எனவே தீபாவளி வரை பஸ் நிலைய பணி நீடிக்கும். எனினும் முன்னதாக பஸ் நிலையத்தை படிப்படியாக திறக்க அரசு முடிவு செய்து உள்ளது. நிலுவையில் உள்ள 10 பணிகளில் சிலவற்றுக்கு டெண்டர் விடப்பட்டு இருக்கிறது. சில பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து முதல்கட்டமாக திருநெல்வேலிக்கு பஸ்கள் இயக்கப்படும். அடுத்த கட்டமாக மதுரைக்கும், 3-வது கட்டமாக விழுப்புரம் செல்லும் பஸ்கள் அனுமதிக்கப்படும். இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். புதிய பணிகள் திட்டத்தால் 25 சதவீதம் செலவு அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News