கூடங்குளம் அருகே பாலிடெக்னிக் மாணவரை தாக்கிய பேராசிரியர் கைது
- மாணவன் பிரவீன் குமார் தனது தாயார் இந்திராவிடம் கூறி உள்ளார்.
- ஆனந்த் மீது சிறுவர் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியில் காவல்கிணறை சார்ந்த பிரவீன் குமார் (வயது 17) என்ற மாணவன் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ இன் பெட்ரோல் கெமிக்கல் என்ஜினியரிங் படித்து வருகிறார். நேற்று மாலை மாணவர் படித்து வரும் துறையின் தலைவரான ஆனந்த் (40) என்பவர் மாணவனிடம் அசைன்மென்ட் நோட்டை கேட்டுள்ளார்.
அப்போது மாணவன் தனது நோட்டை சக மாணவர் ஒருவர் வாங்கி சென்று விட்டதாகவும், எனவே தான் நோட்டில் எழுதவில்லை எனவும் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் ஆனந்த், கம்பால் மாணவனை அடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது .
இதுகுறித்து மாணவன் பிரவீன் குமார் தனது தாயார் இந்திராவிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் துறை தலைவரான ஆனந்த் மீது சிறுவர் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.