பா.ஜ.க. பிரமுகருக்கு முன் ஜாமின் வழங்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு
- தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே ஒரு பதட்டமான சூழல் நிலவியது.
- தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மதுரை:
டெல்லியைச் சேர்ந்தவர் பிரசாந்த் குமார் உம்ராவ். இவர் டெல்லி பா.ஜ.க. பிரமுகராக உள்ளார். மேலும் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். இவர் கடந்த 3-ந்தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் கொடூரமாக தாக்கி கொலை செய்வது போன்ற வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மேலும் பீகார் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த வீடியோ தான் தயாரித்தது இல்லை என்றும், வந்த தகவலை பதிவேற்றம் செய்ததாகவும், இதில் எந்த உட்கருத்தும் இல்லை.
நான் அரசியல் கட்சியில் உள்ளதால் பழிவாங்கும் நோக்கத்தோடு என் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பிரசாந்த் குமார் உம்ராவ் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்று இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே ஒரு பதட்டமான சூழல் நிலவியது. இவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஆகையால் முன் ஜாமின் வழங்கக்கூடாது என வாதிட்டார்.
இதனை பதிவு செய்த நீதிபதி இது போன்ற வீடியோக்களை பதிவு செய்வதை பார்க்கும்போது, தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது போன்ற பதட்டமான சூழலும் நிலவியது என கருத்து தெரிவித்தார். மேலும் நீதிபதி மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்து விட்டார். இந்த மனு குறித்து போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.