மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி
- காயம் அடைந்த தருணை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
வடபழனி, மசூதி தெருவை சேர்ந்தவர் தருண். இவர் மீனம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். தினமும் மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வடபழனிக்கு மெட்ரோ ரெயிலில் சென்று வருவது வழக்கம். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக தருண் மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்து நடை மேடையில் காத்திருந்தார்.
அப்போது மெட்ரோ ரெயில் வந்தபோது திடீரென தருண் ரெயில் முன்பாய்ந்தார். என்ஜின் முன்பு சிக்கிய அவரை சிறிது தூரம் மெட்ரோ ரெயில் இழுத்து சென்று நின்றது. இதில் பலத்த காயம் அடைந்த தருண் அலறி துடித்தார். இதனை கண்டு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். உடனடியாக பலத்த காயம் அடைந்த தருணை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர் தருணின் பெற்றோர் சினிமா துறையில் வேலை பார்த்து வருகிறார்கள். தருண் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருததாக தெரிகிறது. இதனால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. நடைமேடையில் நிற்பதற்காக மெட்ரோ ரெயில் குறைந்த வேகத்தில் வந்ததால் அவர் பலத்த காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இது குறித்து மீன்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.