இஸ்ரேலில் இருந்து இதுவரை தமிழகத்தை சேர்ந்த 132 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்: அமைச்சர் செஞ்சி மஸ்தான்
- எந்த வெளிநாட்டிற்கு சென்றாலும் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகின்றோம்.
- எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
கோவை:
இஸ்ரேல் நாட்டில் இருந்து 8 பேர் இன்று கோவை வந்தனர்.
அவர்களை விமான நிலையத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இஸ்ரேல்-பாலஸ்தீன போர் நடைபெறும் நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. அவசர தேவைக்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 132 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். கோவையை சேர்ந்தவர்கள் 25 பேரும், மற்றவர்கள் சென்னை விமான நிலையம் மூலமும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தொடர்பு கொள்பவர்களை இல்லம் வரை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.
ஒரு சிலர் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றோம். தேவைபட்டால் தொடர்பு கொள்கின்றோம் என்று தெரிவித்து இருக்கின்றனர். விருப்பத்தின் அடிப்படையிலேயே அழைத்து வருகின்றோம்.
எந்த வெளிநாட்டிற்கு சென்றாலும் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகின்றோம்.
எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக் ஆகியோரும் வரவேற்றனர்.