தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழகத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய நிலை வரவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Published On 2022-06-24 07:48 GMT   |   Update On 2022-06-24 07:48 GMT
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,603 அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
  • 8 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

சென்னை சைதாப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

உலகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் ஒரே நாளில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பி4, பி5 ஒமைக்ரான் புதிய வைரஸ் பரவுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,603 அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 8 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை தண்டையார்பேட்டை மாநகராட்சி மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தொற்று அதிகரித்தாலும் உயிர் இழப்பு இல்லாத நிலை. காய்ச்சல், சளி, தொண்டை வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 7 நாட்கள் தனிமைக்கு பின்னர் பாசிட்டிவ் ஆகி விடுகிறார்கள்.

தற்போதைய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையது. அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சென்னையில் 122 இடங்களில் 3 பேருக்கு மேல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளில் துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதால் தமிழகத்தில் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நிலை வரவில்லை.

எந்த மாவட்டத்தில் 40 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்களோ அப்போதுதான் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அத்தகைய நிலை இல்லை. 8 சதவீதம் அளவில்தான் பாதிப்பு உள்ளது. எந்த பகுதியில் அசாதாரண நிலை உள்ளதோ அங்குதான் கட்டுப்பாடுகள் விதிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News