குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு- சமாதான கூட்டத்தில் பாதியில் வெளியேறியதால் பரபரப்பு
- திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
- குடியிருப்புகள் அருகே நடைபெறும் இந்த பணிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூர் பேரூராட்சி,2-வது வார்டு எவெரடி நகர் பகுதியில் வளமீட்பு பூங்கா என்ற பெயரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக ரூ.20 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் கட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. குடியிருப்புகள் அருகே நடைபெறும் இந்த பணிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நிலத்தடி நீர் மாசு, தொற்று நோய் பரவும் வாய்ப்பு இருப்பதால் குப்பைகளை தரம்பிரிக்கும் மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி நடைபெறும் இடம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக பொதுமக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் துணைத் தலைவர் அலெக்சாண்டர், ஜெகன் நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள், குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரியும் கடும்வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.