தமிழ்நாடு

எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் நவீன எந்திரம்- பிளாஸ்டிக் பாட்டில் போட்டால் முகக்கவசம் கிடைக்கும்

Published On 2024-10-05 02:40 GMT   |   Update On 2024-10-05 02:40 GMT
  • பொதுவாக ஆஸ்பத்திரி மற்றும் பொதுஇடங்களுக்கு வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை கீழே போட்டுவிட்டு செல்கிறார்கள்.
  • தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த எந்திரத்தை ஆஸ்பத்திரி நிர்வாகம் வைத்து இருக்கிறது.

சென்னை:

தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் மூலம் அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை தடுக்க ரூ.5 செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும் வகையில் எந்திரங்கள் வைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களை பொது இடங்களில் போடுவதை தடுக்க தமிழக அரசு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பொதுவாக ஆஸ்பத்திரி மற்றும் பொதுஇடங்களுக்கு வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை கீழே போட்டுவிட்டு செல்கிறார்கள். இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

அதை தடுக்கும் வகையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில், எந்திரம் (இன்ஸ்டா பின்- ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்) ஒன்று புதிதாக வைக்கப்பட்டுள்ளது. தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த எந்திரத்தை ஆஸ்பத்திரி நிர்வாகம் வைத்து இருக்கிறது.

இந்த எந்திரத்தில் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை போடும்போது, அதில் உள்ள 'சென்சார்' மூலம் முகக்கவசம் இலவசமாக வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

'சோலார்' முறையில் இயங்கும் இதில் 300 பிளாஸ்டிக் பாட்டில்கள் சேமிக்கும் வகையில் உள்ளது. மேலும், இதில் ஒரு முறை 500 முகக்கவசம் வரையில் வைக்க முடியும். குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் மிகவும் ஆர்வமுடன் இந்த எந்திரத்தில் காலி பாட்டில்களை போட்டு, முகக்கவசத்தை பெறுவதை பார்க்க முடிகிறது. மேலும், இதுகுறித்து குழந்தைகள் நல ஆஸ்பத்திரி மக்கள் தொடர்பு அலுவலர் கங்காதரன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதுகுறித்து, குழந்தைகள் நல ஆஸ்பத்திரி இயக்குனர் ரெமா கூறுகையில், 'காலி பிளாஸ்டிக் பாட்டில் போடும் எந்திரம் அமைத்த உடனே ஏராளமானோர் இதை பயன்படுத்தினர். தற்போது ஆஸ்பத்திரிக்கு வருபவர்களில் 75 சதவீதம் போ் காலி பாட்டில்களை இதில் போடுகின்றனர். விரைவில் அனைவரும் பயன்படுத்த தொடங்குவார்கள் என நம்புகிறோம்.

பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு மட்டுமே கொடுப்பதை விட, இதுபோன்ற எந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதால் பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வாக இருக்கும். புதிதாக ஒரு எந்திரங்களை பார்ப்பவர்கள் அது எவ்வாறு இயங்கும் என்பதை பார்ப்பதற்காக காலிபாட்டில்களை போடுவார்கள். அது நாளடைவில் அவர்களுக்கு காலி பாட்டில்களை பொது இடங்களில் போடக்கூடாது என்ற எண்ணத்தை உருவாக்கும்' என்றார்.

Tags:    

Similar News