பழனியில் நவராத்திரி விழா அக்.15ந் தேதி தொடக்கம்
- மலைக்கோவிலில் இருந்து பாரவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று நவராத்திரி விழா. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. அன்றைய தினம் உச்சிகால பூஜையின்போது காப்பு கட்டப்படும். 9ம் நாளான 23-ந்தேதி மலைக்கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, அதனைத் தொடர்ந்து 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.
மலைக்கோவிலில் இருந்து பாரவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி கோதை மங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.
நவராத்திரி விழாவில் அன்றையதினம் பகல் 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மேல் சம்ரோட்ஷண பூஜைக்கு பின்னர் நடை திறக்கப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.