தமிழ்நாடு

21 நாட்களுக்கு பிறகு ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை இன்று தொடங்கியது

Published On 2023-12-14 04:13 GMT   |   Update On 2023-12-14 04:13 GMT
  • மலை ரெயிலில் பயணிக்க அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள் வந்திருந்தனர்.
  • நீண்ட நாட்களுக்கு பிறகு மலைரெயில் சேவை தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்:

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.

சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரெயிலில் ஒருமுறையாவது பயணிக்க வேண்டும் என விரும்புவார்கள்.

காடுகளுக்கு நடுவே மலைரெயில் செல்வதாலும், இயற்கை காட்சிகளை கண்டு கழிக்கலாம் என்பதாலும் மலைரெயில் பயணத்தை சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் தண்டவாளத்தில் மரங்கள் முறிந்து விழுவது, மண் சரிவுகள் ஏற்பட்டு வந்தன. இதன் காரணமாக மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதனால் மலைரெயிலில் பயணிக்க விரும்பிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் 21 நாட்களுக்கு பிறகு மலைரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது. அதன்படி இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

மலை ரெயிலில் பயணிக்க அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள் வந்திருந்தனர்.

அவர்கள் ரெயில் முன்பு, உள்ளேயும் அமர்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் செல்லும் வழியில் காடுகளின் இயற்கை காட்சிகள், வனவிலங்குகளை கண்டு ரசித்தபடி ரெயிலில் பயணித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மலைரெயில் சேவை தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News