இறந்தவரை அடக்கம் செய்ய விடாமல் சவக்குழியில் படுத்து போராட்டம் நடத்திய விவசாயி
- இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் குழி தோண்டப்பட்ட நிலம் தன்னுடைய நிலம் என கூறி தகராறு செய்தார்.
- அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி உள்ளே படுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பச்சைபெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அப்பாவு(வயது 80). இவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இதனால் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு அவரது உறவினர்கள் பச்சை பெருமாள்புரம் கிராமம் அருகில் உள்ள சுடுகாட்டில் குழி தோண்டினர்.
அப்போது அங்கு செவல்குளம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன்(45) என்பவர் வந்தார். அவர் சுடுகாடு அருகே தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவர் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் குழி தோண்டப்பட்ட நிலம் தன்னுடைய நிலம் என கூறி தகராறு செய்தார். அங்கிருந்தவர்கள் அதனை மறுத்தனர்.
இதனால் அவர் திடீரென அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி உள்ளே படுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவரது கையில் கத்தியையும் வைத்துக்கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இறந்தவரின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் அவரை குழியில் இருந்து வெளியே வருமாறு கூறியும் மாரியப்பன் மேலே வர மறுத்துவிட்டார். சுமார் 2 மணி நேரமாக மாரியப்பன் குழிக்குள் படுத்து கொண்டு போராட்டம் நடத்தியதால், ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழிக்குள் போராட்டம் நடத்திய மாரியப்பனை வெளியே வர வழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் கிராம நிர்வாக அதிகாரி மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இறந்தவரை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழி உள்ள இடத்தை சர்வே செய்தனர். அது சுடுகாட்டுக்கு சொந்தமான நிலம் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாரியப்பனை கண்டித்து அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கு பின் இறந்தவரின் உடல் அந்த குழியில் அடக்கம் செய்யப்பட்டது.