தமிழ்நாடு (Tamil Nadu)

பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு- இயக்குனர் மோகன் ஜி மீது பழனி போலீஸ் நிலையத்திலும் வழக்கு

Published On 2024-09-25 09:50 GMT   |   Update On 2024-09-25 09:50 GMT
  • அடிவாரம் போலீசார் மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  • பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழனி:

பராசூரன், திரவுபதி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பழனியில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் சேர்க்கப்படுவதாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார்.

இதனையடுத்து அவர் மீது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் மேலாளர் கவியரசு கொடுத்த புகாரின் பேரில் நேற்று சென்னையில் இருந்த மோகன் ஜியை கைது செய்தனர். பின்னர் திருச்சி அழைத்து வந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவரை சொந்த ஜாமினில் விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே மோகன் ஜி மீது பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்திலும் தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் அடிவாரம் போலீசார் மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு குறித்து சர்ச்சையான கருத்துகளை பரப்பிய கோவையைச் சேர்ந்த பா.ஜ.க. தொழில் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் செல்வக்குமார், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் ஆகியோர் மீது பழனி அடிவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மோகன் ஜி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News