ஒரே நேரத்தில் திரண்ட அ.தி.மு.க. - பா.ஜ.க. தொண்டர்கள் - தள்ளுமுள்ளு - தடியடி
- தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
- பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார்.
நீலகிரி:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். பல இடங்களில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக, பாஜகவை சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் மனுத்தாக்கலுக்கு பேரணியாக செல்ல முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. இதனால் போலீசார் நடத்திய தடியடியில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையை கண்டித்து நீலகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கூறியதாவது:- எல்.முருகன் வேட்புமனு தாக்கலுக்கு பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். எல்.முருகனுடன் ஊர்வலமாக வந்த பாஜகவினரை உதகை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். காரணம் இன்றி பாஜக தொண்டர்கள் மீது உதகை போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். தடியடிக்கு காரணமாக உதகை எஸ்பி சுந்தரவடிவேலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.