தமிழ்நாடு

தேர்தல் அலுவலகங்களில் திருவிழா கூட்டம்: தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

Published On 2024-03-25 07:05 GMT   |   Update On 2024-03-25 07:12 GMT
  • சுயேட்சை வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
  • வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி (புதன்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 27-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து பவுர்ணமி நாளில் மனுதாக்கல் செய்தனர்.

எந்த ஒரு காரியத்தையும் நல்ல நாளில் தொடங்குவது அ.தி.மு.க.வின் வழக்கமாகும். அந்த வகையில் ஜெயலலிதா வழியை பின்பற்றும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் இன்று நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

அதன்படி அ.தி.மு.க.வின் 33 வேட்பாளர்களும் இன்று மதியம் 12 மணிக்கு அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளர்களான தென்சென்னையில் ஜெயவர்தன், வடசென்னையில் ராயபுரம் மனோ, காஞ்சிபுரம் தனி தொகுதியில் பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களும் இன்றைய தினத்தை தேர்ந்தெடுத்து மனு தாக்கல் செய்தனர்.

இதே போல் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலானோர் இன்று நல்லநாள் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் இதில் உள்ள காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலானோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தென்சென்னையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அடையாறில் உள்ள தேர்தல் அலுவலகத்திலும், வடசென்னையில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி ராயபுரம் மண்டல அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதே போல் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் நாகை, திருப்பூர் தொகுதியிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளிலும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.


திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை கோவையில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அக்கட்சியின் வடசென்னை வேட்பாளர் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ராயபுரம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அடையாறில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் வினோஜ் செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

ஒவ்வொரு வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்த போது அவர்களுடன் மாவட்டச் செயலாளர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடன் வந்திருந்தனர்.

இவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வேட்பு மனு தாக்கலுக்கு வந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் தேர்தல் அலுவலகத்துக்கு செல்ல அனுமதி கிடையாது என்பதால் 100 மீட்டருக்கு அப்பால் நிறுத்தப்பட்டனர்.

இதேபோல் சுயேட்சை வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நல்ல நாளான இன்று ஒரே நேரத்தில் அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் தேர்தல் அலுவலகத்தில் திருவிழா போல் கூட்டம் களை கட்டியது. ஒவ்வொரு வேட்பாளர்களும் மற்ற வேட்பாளர்களை சந்தித்து கொண்டபோது மகிழ்ச்சியுடன் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

Tags:    

Similar News