மின் தடையால் அவதி:சாலையை விரிவுபடுத்தகோரிக்கை- அம்பத்தூரில் பொதுமக்கள் நாளை போராட்டம்
- அவசர சிகிச்சைக்காக பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கே செல்ல வேண்டியுள்ளது.
- மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சென்னை:
சென்னை -திருவள்ளூர் நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும், நிலத்தடி கேபிள்கள் மூலமாக தடை இல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை அம்பத்தூர் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.
சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். அம்பத்தூர் ரெயில்நிலைய பகுதியில் மேம்பாலத்தை அகலப்படுத்த வேண்டும் , சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் பொதுமக்கள் முன்வைக்கிறார்கள்.
அவசர சிகிச்சைக்காக பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கே செல்ல வேண்டியுள்ளது. எனவே அம்பத்தூர் பகுதியில் ஆஸ்பத்திரி ஒன்றை கட்டி தர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன் வைத்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக குடியிருப்போர் நல சங்க தலைவர் சுரேஷ் கூறும்போது, மேற்கண்ட கோரிக்கைகளை மக்கள் நீண்ட நாட்களாகவே முன் வைத்து வருகிறார்கள். அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் அம்பத்தூரில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக உள்ளது. எனவே மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.