மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று தரிசனம்- பள்ளியறை பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று வழிபடுகிறார்
- பிரதமர் மோடி மதுரை வந்து தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது இது 2-வது முறையாகும்.
- பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மதுரை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' யாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 28-ந்தேதி தொடங்கினார். இதை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை இன்று பல்லடத்தில் யாத்திரையை நிறைவு செய்கிறார். இதற்கான நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாலை 4 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மாலை 5 மணி அளவில் மதுரை வந்தடைகிறார். மதுரையில் உள்ள வீரபாஞ்சான் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் மைதானத்தில் வந்து இறங்குகிறார்.
அதே பள்ளியில் மாலையில் நடைபெறும் சிறு, குறு தொழில் அதிபர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அங்கு மத்திய அரசின் தொழில் முனைவோருக்கான ஸ்டார்ட்அப் திட்டம், மத்திய அரசின் மானியம், கடன் உதவி, சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தொழில் அதிபர்களுடன் பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சிவகங்கை ரோடு, ரிங் ரோடு, கப்பலூர் வழியாக திருநகர் அருகே உள்ள பசுமலையில் அமைந்திருக்கும் தனியார் நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 8 மணிக்கு பசுமலை, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் சாலை, தெற்கு வெளிவீதி வழியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார்.
அங்கு சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்கிறார். அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு வழக்கமாக நடைபெறும் பள்ளியறை பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார். பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதை முன்னிட்டு மதுரை நகருக்குள் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அதே வழியில் மீண்டும் பசுமலை நட்சத்திர விடுதிக்கு சென்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.
பிரதமர் மோடி மதுரை வந்து தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது இது 2-வது முறையாகும். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மதுரை வந்திருந்தார். அப்போது அவர் மதுரையில் இரவு தங்கினார். இந்த பயணத்தின்போது பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்தார். அதேபோல் தற்போது 2-வது முறையாக மதுரையில் தங்கி இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு இந்த பகுதிகளில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பயணம் செய்யும் சாலைகளில் மத்திய கமாண்டோ படை போலீசாருடன் மாநில போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் தலைமையில் தென்மண்டல ஐ.ஜி. கண்ணன், போலீஸ் கமிஷனர் லோகநாதன், டி.ஐ.ஜி.க்கள் ரம்யா பாரதி, அபிநவ் குமார் மற்றும் 7 போலீஸ் சூப்பிரண்டுகள், 40 துணை சூப்பிரண்டுகள், 300 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், 8-க்கும் மேற்பட்ட வெடி குண்டு தடுப்பு நிபுணர்கள் உள்பட 7 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை வருகை தரும் பிரதமர் மோடி இன்று இரவு தங்க இருக்கும் பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியின் நுழைவு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காட்சி.
மதுரை விமான நிலையம், பிரதமர் தங்கும் தனியார் விடுதி, திருப்பரங்குன்றம் சாலை, தொழில் அதிபர்கள் மாநாடு நடைபெறும் தனியார் பள்ளி, மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகையையொட்டி பிரதமர் வந்து இறங்கும் தனியார் பள்ளி ஹெலிபேட் மைதானம், ரிங் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் வாகன ஒத்திகையில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம், ஓட்டல் போன்ற இடங்களுக்கு காரில் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் மோடியின் மீனாட்சி அம்மன் கோவில் வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்று கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆகியோர் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அங்கு பிரதமர் மோடி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் வந்து செல்லும் பகுதிகளில் அவர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் விடுதியில் தங்கும் பிரதமர் மோடி நாளை அதிகாலை இயற்கை எழில் சூழ்ந்த மலை குன்றில் அமைந்துள்ள ஓட்டலில் தியானம், யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்கிறார். காலை 8 மணி அளவில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு காரில் விமான நிலையம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி செல்லும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.