4-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு: படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணி தீவிரம்
- தூத்துக்குடி-திருச்செந்தூர், நெல்லை-திருச்செந்தூர் சாலைகள் துண்டிக்கப்பட்டு தற்போது வரை சாலை போக்குவரத்து தொடங்கவில்லை.
- பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.
தூத்துக்குடி:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17-ந்தேதி முதல் மிக பலத்த மழை கொட்டி தீர்த்தது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 16-ந்தேதியே அதிகனமழை பொழிய தொடங்கியது. குறிப்பாக காயல்பட்டினத்தில் 17-ந்தேதி ஒரே நாளில் 95 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் நகரமே துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 17-ந்தேதி தொடங்கி விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது.
இதனால் தூத்துக்குடி மாநகர பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. பெரும்பாலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தத்தளிக்கின்றனர்.
தூத்துக்குடி மாநகர பகுதியை பொறுத்தவரை ராஜகோபால்புரம், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், மகிழ்ச்சிபுரம், குறிஞ்சி நகர், முத்தம்மாள் காலனி, ராம்நகர், ரஹ்மத் நகர், கே.டி.சி. நகர், பிரையண்ட் நகர், அமுதா நகர், ஸ்டேட் பாங்க் காலனி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட இடங்களை வெள்ளம் சூழ்ந்தது.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் 40 படகுகள் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் பொது மக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றுக்கு சுமார் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நெல்லை மாவட்டம் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை தாமிரபரணி கரையோர மக்கள் குடியிருப்புகள் வெள்ளத்தில் சூழ்ந்தது.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள கொங்கராயக்குறிச்சி, தூத்துக்குழி, சந்தையடியூர், எஸ்.என்.பட்டியூர், அய்யனார்குளம் பட்டி, மணக்கரை, ஆழ்வார்கற்குளம், பத்மநாப மங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
குறிப்பாக ஆழிக்குடி கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதையறிந்த அனவரநல்லூர் கிராம மக்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவத்தினர், மீனவர்கள் உள்ளிட்டோர் அக்கிராமத்தில் இருந்த 800 பேரை படகுகள் மூலம் பத்திரமாக மீட்டு பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
இதே போல் முத்தாலங்குறிச்சி, நாணல்காடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 1,500 கிராம மக்கள் மீட்கப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் பகுதி முழுவதும் தாமிரபரணி வெள்ளம் சூழ்ந்து தனித்தீவாக மாறி உள்ளது.
தூத்துக்குடியில் நேற்று காலை முதல் மழை ஓய்ந்துள்ளது. எனினும் சாலையில் தேங்கிய தண்ணீர், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் ஆகியவற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தூத்துக்குடி-திருச்செந்தூர், நெல்லை-திருச்செந்தூர் சாலைகள் துண்டிக்கப்பட்டு தற்போது வரை சாலை போக்குவரத்து தொடங்கவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், வசவப்ப புரம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, வல்லநாடு, புதுக்கோட்டை, கோரம்பள்ளம், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு கருதி அங்கு மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் செல்லும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தொலை தொடர்பு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் அவர்களது உறவினர்கள் கடந்த 4 நாட்களாக தவித்து வருகிறார்கள்.
தொடர்பு கொள்ள முடியும் நிலையில் உள்ளவர்களின் செல்போன்கள் மின்வசதி இல்லாததால் சார்ஜ் செய்ய முடியாததால் அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்பு படையினரும், துணை ராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையே கூடுதலாக ஆந்திரா மாநிலத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதிப்பு பகுதிகளுக்கு விரைந்து உள்ளனர். தேவைப்பட்டால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும் மீட்பு குழுவினர் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 25-க்கும் மேற்பட்ட ராணுவ குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆறாம் பண்ணையில் இருந்து மணக்கரை செல்லும் ரோடு மூழ்கி உள்ளது. மாவட்டத்தில் மழை வெள்ளம் புகுந்ததால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் தூத்துக்குடி மாநகர் பகுதியில் சில இடங்களிலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இன்று 4-வது நாளாகவும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழையால் தோப்பூர் பகுதியில் உள்ள கால்வாயில் வரும் மழைநீர் நிரம்பி அப்பகுதி சாலை வழியாக தெப்பகுளம் முன்புள்ள சாலையில் வெள்ளமாக மழைநீர் ஓடியது.
அப்பகுதியில் மழைநீர் முட்டளவு முதல் இடுப்பளவு வரை மழை நீர் வெள்ளமாக ஓடியதால் அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மற்றும் சாலையை கடக்கும் அப்பகுதி பொதுமக்கள் படகு மூலம் மழைநீரை கடந்து சென்றனர்.
மேலும் இந்த மழைநீர் காமராஜர் சாலை வழியாக டிபி ரோடு மற்றும் பகத்சிங் பஸ் நிலையம், மார்க்கெட் வழியாக அப்பகுதியில் உள்ள கால்வாய்க்கு சென்றது. அதேபோல், திருச்செந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீரானது குளம் போல தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமபட்டனர்.
தூத்துக்குடி மாநகர் பகுதியில் திருச்செந்தூர், காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, தென்திருப்பேரை, ஏரல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.
மாவட்டத்தின் புறநகர் பகுதிகள் மற்றும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் துண்டிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. படகுகள் மூலம் மீட்கப்படும் பொதுமக்கள் அருகே உள்ள திருமண மண்டபங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்கள், அரசு மருத்துவமனை, தொழிற்சாலைகள், வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் மழை ஓய்ந்தும் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. அதனை அகற்றி இயல்பு நிலை திரும்ப தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.