தமிழ்நாடு

எல்லை தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 21 பேர் விடுதலை

Published On 2023-11-15 07:25 GMT   |   Update On 2023-11-15 07:25 GMT
  • 3-வது கட்டமாக இன்று சிறையில் இருந்த 22 பேரில் 21 மீனவர்களை இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
  • விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமேசுவரம்:

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

அந்த வகையில் கடந்த மாதம் 14 மற்றும் 28-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 64 மீனவர்களை கைது செய்த சிங்கள கடற்படை 10 படகுகளையும் பறிமுதல் செய்தது.

அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த 8-ந்தேதி 4 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

அடுத்ததாக கடந்த 9-ந்தேதி 38 பேருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்த இலங்கை மன்னார் நீதிமன்றம், இந்த தண்டனையை 5 வருடம் சென்ற பிறகு அனுபவிக்க வேண்டும் என்ற விநோத நிபந்தனையுடன் விடுதலை செய்தது.

இந்தநிலையில் 3-வது கட்டமாக இன்று சிறையில் இருந்த 22 பேரில் 21 மீனவர்களை இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. மீதமுள்ள ஒருவரான முருகன் என்பவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்துள்ளது. அதன் பின்னரும் எல்லை தாண்டினால் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று கோர்ட்டு எச்சரித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 22 பேரும் விடுதலையாவார்கள் என்று அவர்களது உறவினர்கள் காத்திருந்த நிலையில் ஒருவருக்கு மட்டும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News