ரவுடி கொலையில் புதுவை பிரபல தாதா உள்பட 5 பேர் கைது
- கொலை செய்த மர்ம கும்பல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
கடலூர்:
புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் முகிலன். பிரபல ரவுடி. இவர் நேற்று இரவு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே பாலூர் சித்தரசூர் காலனி பகுதியில் உள்ள விவசாய கரும்பு தோட்டத்தில் கும்பலுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் முகிலனை வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க பண்ருட்டி டி.எஸ்.பி சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சீனுவாசன், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான 3 தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொலை செய்த மர்ம கும்பல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி போலீசார் 5 பேர் கொண்ட கும்பலை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் புதுவை ரவுடி முகிலனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். உடனே போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
ரவுடியை கொலை செய்த கும்பல் புதுவை மாநிலத்தை கலக்கும் மற்றொரு பிரபல ரவுடியான முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஸ்வரன் (வயது 31), அரியாங்குப்பம் விஸ்வா (23), ரெட்டியார்பாளையம் கணபதி (27), புவனேஸ்வர் (20), உழவர்கரையை சேர்ந்த ஸ்ரீராக் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
ரவுடி விக்கிக்கும் கொலை செய்யப்பட்ட முகிலனுக்கும் புதுவை மாநிலத்தில் யார் பெரிய ரவுடி என்ற முன்விரோத தகராறு நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோத தகராறில் ரவுடி விக்கி என்ற விக்னேஸ்வரனை, முகிலன் திட்டம் தீட்டி கொலை செய்ய முயன்றுள்ளார்.
ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட முகிலன் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியேவந்தார். சிறையில் இருக்கும் போது நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த புகழ் என்ற கைதியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஜெயிலில் இருந்து வெளியே வந்த முகிலன் புதுவையில் இருந்தால் ரவுடி விக்கி கொலை செய்து விடுவான் என்ற நோக்கத்தில் சிறையில் பழக்கமான கைதி புகழின் பகுதியான சித்தரசூர் பகுதிக்கு சென்று தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் விக்னேஸ்வரன் தரப்பை சேர்ந்தவர்கள் முகிலனை தீவிரமாக தேடி வந்த நிலையில் முகிலன் நெல்லிக்குப்பம் அருகே சித்தரசூர் பகுதியில் பதுங்கியிருப்பது விக்கி தரப்பிற்கு தெரிய வந்தது.
இதனையடுத்து முகிலன் எங்கு செல்கிறான் என்பதை விக்கி தரப்பை சேர்ந்தவர்கள் நோட்டமிட்டனர். இந்நிலையில் நேற்று ஒரு கும்பலுடன் முகிலன் சித்தரசூர் பகுதியை அடுத்த விவசாய கரும்பு தோட்டத்தில் மது குடித்து கொண்டிங்கும் தகவல் விக்கி தரப்பிற்கு தெரிவந்தது. உடனே விக்கி தரப்பை சேர்ந்தவர்கள் வீச்சரிவாளுடன் அங்கு சென்று முகிலனை ஓட ஓடவிரட்டி கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
முகிலன் கொலை செய்யப்பட்டபோது அவருடன் இருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.