தமிழ்நாடு

சமயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ. 2½ கோடிக்கு ஆடுகள் விற்பனை

Published On 2024-06-15 04:48 GMT   |   Update On 2024-06-15 04:48 GMT
  • திண்டுக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகை தந்தனர்.
  • ஆடுகள் வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை என விவசாயிகள் கூறினர்.

திருச்சி:

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் இஸ்லாமியர்கள் உறவினர்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆடுகள் குர்பானி கொடுத்து தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பண்டிகைக்கு அவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தை இன்று களை கட்டியது. இங்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகை தந்தனர்.

அதேபோன்று திருச்சி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பக்ரீத் பண்டிகையை ஒட்டி வழக்கத்துக்கு மாறாக வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிக அளவில் காணப்பட்டது.

100-க்கும் மேற்பட்ட டெம்போக்களில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சந்தை நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று காலை 9 மணி வரை நடந்தது. இதில் ரூ. 2½ கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக இந்த சந்தையில் நாளொன்றுக்கு ரூ.1 கோடி முதல் 1½ கோடி வரை வியாபாரம் நடைபெறும். நாளை மறுநாள் பக்ரீத் பண்டிகை நடைபெறுவதால் இன்று ரூ.1 கோடி அளவுக்கு கூடுதல் விற்பனை நடந்துள்ளது.

ஆடுகள் வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை என விவசாயிகள் கூறினர். பொதுவாக ஒரு ஆடு ரூபாய் 8 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனையாகும்.

இன்று நடைபெற்ற சந்தையில் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ 22 ஆயிரம் வரை அதிகபட்சமாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதில் செம்மறி ஆடுகளுக்கு அதிக கிராக்கி இருந்தது. இன்று நடைபெற்ற சந்தையில் 5 ஆயிரத்து 500 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

Tags:    

Similar News