ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.42 லட்சம் மோசடி-ஆன்லைனில் சூதாட்டம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு
- வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே வங்கி பணம் ரூ.42 லட்சம் மோசடி செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் சுரேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மதுரை:
மதுரை சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக மதுரை மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அத்துடன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சுரேஷ் தான் வேலை பார்க்கும் வங்கியிலேயே தனது மனைவி மற்றும் சகோதரி பெயரில் போலியான நகைகளை அடகு வைத்துள்ளார். மேலும் அதன் மூலம் ரூ.8 லட்சத்து 91 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இந்த உண்மை வங்கியில் நடைபெற்ற தணிக்கை பணியின் போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
அதேபோல் ஏ.டி.எம். எந்திரங்களில் வங்கி சார்பில் வைக்க வேண்டிய ரூ.39 லட்சத்து 19 ஆயிரத்தையும் தனது மனைவி மற்றும் சகோதரியின் வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.
அவ்வாறு கிடைத்த பணத்தை கொண்டு சுரேஷ், ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாகவும் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுரேஷ் மீதும் அவருக்கு உதவியதாக லட்சுமணன், சியர்ல தினா சுமதி ஆகிய 3 பேர் மீதும் கிளை மேலாளர் பெருகினியன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சுரேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே வங்கி பணம் ரூ.42 லட்சம் மோசடி செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.