நான் உயிரோடு இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை ஒரு போதும் முடங்க விட மாட்டேன்- சசிகலா
- ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆக போகிறது. 5 வருடங்களுக்கு பிறகு அந்த பெட்டிகளை திறந்தால் பிரயோஜனமில்லை.
- எப்போது பெட்டிகளை திறந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்?
சென்னை:
திருவாரூர் மாவட்டம் சுந்தரக்கோட்டையில் சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
அ.தி.மு.க.வை மீண்டும் தனித்தன்மையோடு கொண்டு வர முடியும் என்று உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.க. ஒன்றிணைய வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். ஏன் வாய்ப்பு இருக்கிறதா? என்று நினைக்கிறீர்கள். நிச்சயம் ஒன்றிணையும்.
என்னை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.
ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கேட்கிறீர்கள். அதனை நான் எப்படி சொல்ல முடியும். அது மக்கள் கையில் தான் இருக்கிறது.
நான் ஜெயலலிதாவின் பிரசாரங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய முடியுமோ அதனை மட்டும் தேர்தல் பிரசாரத்தில் சொல்வோம். ஏனென்றால் திரும்பவும் மக்களை நாங்கள் சந்திக்கும் போது அவர்கள் எங்களிடம் பேச வேண்டுமே தவிர, ஏன் சொன்னதை செய்யவில்லை என்று கேள்வி கேட்கக்கூடாது என்ற எண்ணத்தில் என்ன செய்ய போகிறோமோ அதனை மட்டும் தான் சொல்வோம்.
தி.மு.க. சார்பில் தேர்தல் சமயத்தில் பெரிய பெட்டி வைத்து பூட்டு போட்டு, அதில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை கடிதங்களாக போடுங்கள். அதன் சாவி என்னிடம் தான் இருக்கும்.
ஆட்சிக்கு வந்ததும் அந்த பெட்டிகளை எல்லாம் திறந்து அந்த கோரிக்கை கடிதங்களை மாவட்டம் வாரியாக பிரித்து, அதில் ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி வாரியாக மீண்டும் பிரித்து மக்களின் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னது ஊடகங்களிடம் இருக்கும்.
அது போன்று சொல்லி மக்களை நாங்கள் ஏமாற்ற மாட்டோம். அந்த பெட்டியின் சாவி தொலைந்து விட்டது என்று தான் நான் நினைக்கின்றேன். ஏனென்றால் அந்த சாவி இருந்திருந்தால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி இருப்பார்கள்.
ஊடகங்கள் முன்பு வைத்து தான் அந்த பெட்டிகளை பூட்டு போட்டு பூட்டினார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆக போகிறது. 5 வருடங்களுக்கு பிறகு அந்த பெட்டிகளை திறந்தால் பிரயோஜனமில்லை.
அதனால் எப்போது அந்த பெட்டிகளை திறந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்?
அடுத்தவர்களை குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாம் சரியாக இருந்தால் நம்மை யார் என்ன செய்து விட முடியும். பா.ஜனதா மட்டுமல்ல, எல்லா கட்சியையும் சொல்கின்றேன் அடுத்த கட்சியை குறை சொல்லி கொண்டு இருக்க கூடாது.
அவரிடம் கொடு, இவரிடம் கொடு என்று மற்ற கட்சிகள் ஏமாற்றுவதற்கு நாம் என்ன ஒரு மாத குழந்தையா? நாம் சரியாக இருந்தால், சரியாக செயல்பட முடியும். என்னையெல்லாம் யாரும் எதுவும் செய்ய முடியாது. என் நிழலை கூட யாரும் நெருங்க முடியாது.
நான் உயிரோடு இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை ஒரு போதும் முடங்க விடமாட்டேன்.
இவர்களின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை பார்க்கும் போது அது தி.மு.க.வுக்கு தான் நல்லதாக இருக்கிறது. அதனால் ஒருவருக்கொருவர் திட்டுவதை விட்டு விட்டு ஒழுங்காக ஒருங்கிணைந்து தி.மு.க.வை வீழ்த்துவதற்கு கைகோர்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.