தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் துளியும் இல்லை.. ஜாமினில் வெளியே வந்த சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
- சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.
- பல உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சவுக்கு மீடியா முடக்கப்பட்டது.
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் கூறியதாவது:-
* தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் என்பது துளியும் இல்லை.
* தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் அல்ல. விமர்சனங்களை பார்த்து பழகியவர் அல்ல. தந்தையின் நிழலில் வளர்ந்தவர் தான்.
* பணியில் ஒருவர் இறந்தால் கருணை அடிப்படையில் வழங்குவது போல தான் தி.மு.க. தலைவர் ஆகியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதுபோலத்தான் தமிழகத்தில் முதல்வராகவும் ஆகியிருக்கிறார்.
* உண்மைகளை சவுக்கு மீடியா ஏறக்குறைய 8 மாதங்கள் எடுத்துக் கூறியதன் காரணமாக தான் சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.
* நாட்டில் நடக்கும் உண்மைகள் எந்த வகையில் வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் மற்றும் அவரது மகன் ஆகியோர் மிக கவனமாக இருக்கின்றனர்.
* டிசம்பர் 2023-ல் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் தமிழகத்தில் சட்டவிரோதமாக மெத்தனால் சர்வ சாதாரணமாக கடத்தப்படுகிறது. உடனடியாக இதை தடுக்கப்பட வேண்டும். தடுக்கவில்லை என்றால் மரக்காணத்தில் ஏற்பட்டதுபோல் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது என்று உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தின் மீது தமிழக முதல்வர் நடுவடிக்கை எடுத்து இருந்தால் என்றால் 66 உயிர்கள் பலியாகி இருக்காது, இதுபோன்ற பல உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சவுக்கு மீடியா முடக்கப்பட்டது.
இவ்வாறு சவுக்கு சங்கர் கூறினார்.