பா.ஜ.க. பிரமுகர் கடைக்கு டீசல் ஊற்றி தீ வைத்த வழக்கில் கைதான எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 4 பேர் சிறையில் அடைப்பு
- பு.புளியம்பட்டியில் பா.ஜனதா பிரமுகர் சிவசேகர் காருக்கு தீ வைத்தது தொடர்பாக தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மூலப்பாளையத்தில் பா.ஜ.க. பிரமுகர் தட்சிணாமூர்த்தி (51) என்பவர் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
அப்போது நள்ளிரவில் இவரது கடைக்கு வந்த மர்மநபர்கள் சிலர் டீசல், பெட்ரோல் நிரப்பிய பாக்கெட்டுகளை ஜன்னல் வழியாக கடைக்குள் வீசினர். மேலும் ஒரு குச்சியில் தீ வைத்தும் வீசினர்.
இதில் ஜன்னல் மற்றும் கடைக்குள் இருந்த டேபிள் லேசாக எரிந்து அணைந்தது. காலையில் கடைக்கு வந்து பார்த்தபோது டீசல், பெட்ரோல் பாக்கெட்டுகள் கிடப்பதும், மேஜை, ஜன்னல் சிறிய அளவில் எரிந்து கிடப்பதையும் கண்டு தட்சிணாமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் தாலுகா போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி, டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுபற்றி தெரியவந்ததும் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கடை முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று இரவு பர்னிச்சர் கடைக்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்து பெட்ரோல், டீசல் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து கேமிராவில் பதிவானவர்களை போலீசார் தேடி வந்தனர். அப்போது அவர்கள் கருங்கல்பாளையம் ஜெகன் வீதியை சேர்ந்த முகமதுரபீக் என்பவரது மகன் சதாம்உசேன் (25), பி.பி.அக்ரஹாரம் கைக்கோளர் வீதியை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவரது மகன் கலில்ரகுமான் (27), இந்திரா நகரை சேர்ந்த அமனுல்லா என்பவரது மகன் ஜாபர்சாதிக் (27), அவரது தம்பி ஆசிக்அலி (23) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் அனைவரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் மீது சொத்தை சேதப்படுத்துதல், கூட்டு சதி செய்தல், தீயை வைத்து சொத்தை சேதப்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவையில் சிறையில் அடைத்தனர்.
மேலும் பு.புளியம்பட்டியில் பா.ஜனதா பிரமுகர் சிவசேகர் காருக்கு தீ வைத்தது தொடர்பாக தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.