தி.மு.க. ஊழலால் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்- செங்கோட்டையன் பேச்சு
- தி.மு.க. ஆட்சியில் எஸ்.ஜ.எப்.ஐ. விளையாட்டு போட்டியில் கூட மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
- பேருந்து சேவை குறைக்கப்பட்டதால் இலவச பேருந்து பயணமும் கிடைக்கவில்லை.
ஈரோடு:
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி ஈரோட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
தமிழ்நாட்டில் 13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தார். 5 முறை ஜெயலலிதா முதல்வரானார். பிறகு இ.பி.எஸ். மாநிலத்தில் ஆட்சி செய்தார். அத்திக்கடவு-அவினாசி குடிநீர் திட்டம் உட்பட பல நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை வழங்கினார்.
ஆனால் தி.மு.க. ஆட்சியில் எஸ்.ஜ.எப்.ஐ. விளையாட்டு போட்டியில் கூட மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மின் விநியோகம் அவ்வப்போது தடைப்படுகிறது. பேருந்து சேவை குறைக்கப்பட்டதால் இலவச பேருந்து பயணமும் கிடைக்கவில்லை. கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் விலை, சொத்து, தண்ணீர் வரி உயர்த்தப்பட்டது. மதுவின் மூலம் தி.மு.க.வுக்கு பல கோடி ரூபாய் தினசரி கிடைக்கிறது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் மட்டுமே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க. ஊழலால் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அதைத்தொடர்ந்து தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதியில் அ.தி.மு.க அபார வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.