தமிழ்நாடு

சிவகாசி அருகே வெடி விபத்தில் 2 பேர் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 3பேர் மீது வழக்கு

Published On 2023-01-20 06:00 GMT   |   Update On 2023-01-20 06:00 GMT
  • விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் வெம்பக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
  • வழக்குப்பதிவு செய்துபட்டாசு ஆலை போர்மேன் கண்ணன் என்பவரை கைது செய்தனர்.

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி கணஞ்சாம்பட்டி கிராமத்தில் மாயகண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் நடத்தி வந்தார்.

இந்த பட்டாசு ஆலையில் மொத்தம் 41 அறைகள் உள்ளன. இங்கு நேற்று 38 பேர் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். மாலை 3 மணி அளவில் இந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

அப்போது பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் 8 அறைகள் இடிந்து சேதமானது. இதில் சாத்தூர் அருகே சத்திரப்பட்டியை சேர்ந்த குமார் மகள் முனீஸ்வரி (வயது 30), அமீர்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் (60)ஆகிய 2 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் இந்த விபத்தில் அமீர்பாளையம் முனியசாமி (28), சிவகாசி சுப்பிரமணியாபுரம் காலனி ராஜ்குமார் (38), மேல கோதைநாச்சியார்புரம் மாரிமுத்து (54), தாயில்பட்டி மேலகோதை நாச்சியார்புரம் மகேஸ்வரன் (42), அன்பின் நகரம் காலனி தெரு தங்கராஜ் (49), படந்தால் மாரியப்பன் (42), அன்பின் நகரம் நடுத்தெரு ஜெயராஜ் (70), புதுப்பாளையம் முருகன் (52), செல்லதாய் (45), மேட்டுப்பட்டி குருசாமி (60), ஆலங்குளம் ஜோதி (51), சுண்டங்குளம் முனீஸ்வரி (38), மேல கோதைநாச்சியார்புரம் கருப்பசாமி (38) உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவர் நிலைமை கவலைகிடமாக உள்ளது.

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் வெம்பக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துபட்டாசு ஆலை போர்மேன் கண்ணன் என்பவரை கைது செய்தனர்.

பட்டாசு ஆலை உரிமையாளர் மாயக்கண்ணன், அவரது மனைவி ஆறுமுகத்தாய் மற்றும் ஒப்பந்ததாரர் கந்தசாமி ஆகியோர் மீது விபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் பலியான தகவல் கிடைத்ததும் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் பார்த்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இந்த விபத்தில் காயம் அடைந்த ராஜ்குமார், மாரிமுத்து, கருப்பசாமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News