அரசு மருத்துவமனையில் டெங்கு வார்டில் உள்ள கழிவறையில் புகுந்த நல்லபாம்பு
- டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மற்றொரு வார்டுக்கு உடனடியாக மாற்றினர்.
- வன ஆர்வலர் செல்லா டெங்கு வார்டுக்கு வந்து கழிவறையில் இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார்.
கடலூர்:
கடலூரில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் நோயாளி ஒருவர் கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு பாம்பு ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அலறி அடித்து அங்கிருந்த ஊழியர்களிடம் பாம்பு இருப்பது குறித்து தெரிவித்தார். மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக கழிவறை கதவை மூடிவிட்டு, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதற்கிடையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மற்றொரு வார்டுக்கு உடனடியாக மாற்றினர். இதனை தொடர்ந்து வன ஆர்வலர் செல்லா டெங்கு வார்டுக்கு வந்து கழிவறையில் இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார். பிடிக்கப்பட்ட பாம்பை பாதுகாப்பாக பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து அங்கிருந்து எடுத்து சென்றார். இந்த சம்பவத்தால் கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு திடீர் பரபரப்பு நிலவியது.