திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு
- ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்படாமல் தொடர்ந்து இருந்தது.
- ஆக்கிரமித்து கட்டப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே வரதராஜ நகர் பகுதிக்கு செல்ல கற்குழாய் தெருவில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. ஆனால் அந்த பகுதியில் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதனை அகற்ற கட்டிட உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கினார். ஆனால் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்படாமல் தொடர்ந்து இருந்தது.
இந்த நிலையில் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில், பொறியாளர் நாகராஜ், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரங்களுடன் கற்குழாய் தெருவிற்கு வந்தனர்.
அவர்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் உரிமையாளர்கள் சிலர் தங்களது வீட்டின் சுவற்றின் மேல் ஏறிநின்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் திருவள்ளூர் டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்பு வீடுகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது.
இதகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கற்குழாய் தெருவில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்பட்டு உள்ளன. இன்னும் சில நாட்களில் அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெறும் என்றனர்.